குமுதத்தில் “சுஜாதாவின் கதை” என்ற தொடரிலிருந்து:

“சுஜாதாவின் நாவல்களில் முதலில் படமாகியது காயத்ரி. பஞ்சுஅருணாசலம்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார்.

“தினமணி கதிரில் `காயத்ரி’ தொடராய் வரும்போதே அதை திரைப்படமா எடுக்கணும்னு நினைச்சேன். தொடர் முடிஞ்சதும் சுஜாதாவைபாம்குரோவ் ஓட்டல் ரூம்ல சந்திச்சேன். ரொம்ப எளிமையா பழகுனார். பெரிய எழுத்தாளர்களுக்கு இருக்கும் பந்தா எதுவும் இல்ல. எல்லாத்தையும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டார். அப்போ அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. அவரோட ஆர்வம் என்னை ரொம்ப கவர்ந்தது” என்று, தான் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

“படம் வெளில வந்தபிறகு அந்தப் படத்தில் அவருக்கு அத்தனை திருப்தியில்லை. சினிமா திரைக்கதைக்காக சிலவற்றை மாற்றியிருந்தோம். அதைச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். கதையாய் எழுதுவது வேறு. அதை சினிமாவுக்காக மாற்றுவது வேறு என்பதை உணர்ந்துகொண்டார்” என்கிறார் பஞ்சு அருணாசலம்.

சுஜாதாவும் `காயத்ரி’ கதைக்கு சினிமாவில் நடந்த சேதாரங்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த முதல் பட அனுபவத்திலேயே சினிமாவின் சூட்சுமங்கள் அவருக்கு பிடிபட்டுவிட்டது.

“எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் `ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னை தயார்படுத்தியது” என்று சமீபத்தில் குமுதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சுஜாதா.

நினைவிலிருந்து எழுதுகிறேன். இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தாலோ, இல்லை எழுதினாலோ ரொம்ப சந்தோஷப்படுவேன்.

காயத்ரி பற்றி எனக்கு இருக்கும் அழியாத ஞாபகம் ஜெயராஜின் படம்தான். எனக்கு அப்போது பத்து வயது இருக்கலாம். சாதாரணமாக நாங்கள் வாங்காத பத்திரிகை எதிலோ தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. தினமணி கதிர் என்றுன் நினைக்கிறேன். யார் வீட்டிலோ பார்த்தேன். வில்லனின் “அக்கா” மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பாவாடை பிராவுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கும் படம். அப்படியே ஷாக் ஆகி ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்! பிறகு யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேக வேகமாக படித்தேன். அதுவோ தொடர்கதையின் நடுவில் வரும் ஒரு சாப்டர். தலையும் காலும் புரியாவிட்டாலும், “அக்கா” காயத்ரியை மரியாதையாக சொன்னதை கேட்டு நடக்க சொல்லு என்று சொல்வாள். அப்புறம் அந்த பத்திரிகை கிடைக்குமா என்று அலைந்து திரிந்து பார்த்தேன், கிடைக்கவில்லை. கடைசி சாப்டர் மட்டும்தான் படிக்க முடிந்தது. அதில் வசந்த் “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று காயத்ரியிடம் சொல்வது நினைவிருக்கிறது.

நாலைந்து வருஷம் கழித்து புஸ்தகம் கிடைத்தது. யாராவது பார்ப்பார்களோ என்ற பயம் அப்போது போய்விட்டது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அது கிழித்து பைண்ட் செய்யப்பட்டது அல்ல.

விறுவிறுப்பான கதை – காயத்ரியின் டைரியை ஒரு பழைய பேப்பர் கடையில் வசந்த் பார்ப்பார். காயத்ரியின் புகுந்த வீடு ஒரு மர்ம தேசம். விதவையான “அக்கா”, சமையல்காரன், வேலைக்காரி, கணவன், பைத்தியமான மறைத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் மனைவி, எல்லாரும் ஏதோ ரகசியத்தை மறைக்கிறார்கள். காயத்ரி ஏறக்குறைய ஒரு ஜெயிலில் இருப்பார். அவரால் வெளியே போகவோ, கடிதம் எழுதவோ முடியாது. கணேஷும் வசந்தும் காயத்ரி எங்கே என்று கண்டுபிடிப்பார்கள். காயத்ரியை வைத்து ப்ளூ ஃபில்ம் எடுக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவரை விடுவிப்பார்கள்.

ப்ளூ ஃபில்ம் என்றால் என்னவென்று தெரியாத வயது. எப்படி விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

திரைப்படமாக வந்தது. ரஜினிகாந்த் ஆண்டி-ஹீரோ. ராஜசுலோச்சனா “அக்கா” அசோகன் அவரது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடிப்பார். ஸ்ரீதேவிதான் காயத்ரி. ஜெய்ஷங்கர் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி வசந்த்!

கை வசம் இருந்த கதைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன. ஞாபகத்திலிருந்து எழுதலாம், ஆனால் முழு விவரங்கள் எழுத முடியாது. புஸ்தகங்கள் வாங்க இஷ்டம் இல்லை. இந்தியாவில் என் வீட்டில் இரைந்து கிடக்கின்றன. வேறு யாராவது எழுத வருகிறீர்களா? இல்லை என்றால் புஸ்தகங்கள் இரவல் தருகிறீர்களா? இங்கே (சான் ஃப்ரான்ஸிஸ்கொ அருகே நூவர்க்) ஏதாவது நூலகத்தில் கிடைக்குமா? விவரம் தெரிந்தவர்கள் மறுமொழி அனுப்புங்கள் அல்லது என் ஈமெயிலுக்கு (rv_subbu at yahoo dot com) எழுதுங்கள்.

குமுதத்தில் குறுநாவலாக வந்தது. அறுபதுகளில் வந்தது என்று படித்தேன், எப்போது வந்தது என்று தெரியவில்லை. கணேஷ் இன்னும் டெல்லியில்தான் இருக்கிறார்.

சின்ன knotதான். நீரஜா என்று ஒரு க்ளையண்ட். அவரது அப்பா ஒரு கொலைக்கேசில் ப்ளாக்மெய்ல் செய்யப்படுகிறார். கணேஷ் எப்படி knotஐ அவிழ்க்கிறார் என்று சொல்லிவிட்டால் அப்புறம் கதையை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் மிச்சத்தை காகிதத்தில் காண்க. தன்னை காப்பாற்றிய கணேஷுக்கு பாதி ராஜ்யம் தருவதாக அப்பா சொல்ல, கணேஷ் நீரஜாவை பார்க்கிறார். நல்ல வேளையாக கல்யாணம் கில்யாணம் ஆகாமல், நீரஜா அவருக்கு அசிஸ்டன்டாக அடுத்த கதையில் (ஒரு விபத்தின் அனாடமி) வருகிறார்.

டெல்லியின் ஜியாக்ரஃபி, முக்கியமாக ரோடுகள் பேசப்படுகின்றன. நாற்பது வருஷங்களில் எல்லாம் மாறிப் போயிருக்கும். கணேஷிடம் கொஞ்சம் வசந்தின் குணங்கள் தெரிகின்றன. முக்கியமாக கணேஷ் சைட் அடித்த ஒரே பெண் நீரஜாவாகத்தான் இருக்கும். பழைய நாவல்கள் – அனிதா இளம் மனைவி, நைலான் கயிறு இதையெல்லாம் திருப்பி படித்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கதையும், ஒரு விபத்தின் அனடாமியும் “பாதி ராஜ்யம்” என்ற தொக்குப்பில் கிடைக்கின்றன. நான் சான் ஹோசே நூலகத்தில் எடுத்து படித்தேன்.

ஒரு நீண்ட கதை. குறுநாவல் என்று சொல்லலாம். கணேஷ் இன்னும் டெல்லியில்தான் இருக்கிறார். கதை அறுபதுகளின் இறுதியிலோ எழுபதுகளின் துவக்கத்திலோ எழுதப்பட்டிருக்கவேண்டும். அவரது அசிஸ்டன்ட் நீரஜா.

ப்ராப்ளம் இதுதான். மூன்று சாலைகள் ஒன்றாக கூடி ஒரு சாலையாக (ஒரு சூலம் மாதிரி) மாறும் இடத்தில் ஒரு ஹிட் அண்ட் ரன் ஆக்சிடென்ட். அதிவேகமாக வந்த கருப்பு மாதிரி ஒரு நிறக் கார் ஒரு ஸ்கூட்டரை ராத்திரி பன்னிரண்டரை மணிக்கு இடித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஏதோ ஒரு நகருக்கு ஓடிவிட்டது. இடித்தது யாரென்று கண்டுபிடிக்கவேண்டும்.

  1. வேகமாக வந்தது ஒரு பணக்கார இளைஞனாக இருக்க வேண்டும் என்று முதல் ஊகம். இளைஞர்கள்தான் வேகமாக வருவார்கள்.
  2. லைசன்ஸ் இருப்பது சந்தேகமே என்பது இரண்டாவது ஊகம்.
  3. திரும்பாமல் நேராக வந்தால்தான் வேகமாக வர முடியும் என்பதால் சூலத்தின் நடுக்கொம்பிலிருந்துதான் வந்திருக்கவேண்டும் என்பது அடுத்த ஊகம்.
  4. சில பூகோளக் காரணங்களால் நடுக்கொம்பில் மூன்று இடங்கள்தான் பாசிபிள். ஒரு தியேட்டர், ஒரு குடியிருப்பு, ஒரு இன்ஸ்டிட்யூட். 
  • தியேட்டரில் படம் 11:45க்கு முடிகிறது, அதனால் தியேட்டர் இல்லை.
  • குடியிருப்பு ஒரு லோயர் மிடில் க்ளாஸ் குடியிருப்பு, அதனால் அங்கிருந்து வர சாத்தியங்கள் குறைவு.
  • இன்ஸ்டிட்யூட் ஐந்து மணிக்கு மூடிவிடுவார்கள்.

 பழைய பேப்பர்களை புரட்டிப் பார்த்து விபத்து அன்றைக்கு இன்ஸ்டிட்யூட்டில் ப்ரிட்ஜ் போட்டி 12:15 வரைக்கும் நடந்திருப்பது தெரிகிறது. பிறகு சாதாரணமான லெக்வொர்க், அவ்வளவுதான்.

கணேஷ் ஒவ்வொரு கட்டத்திலும் சாத்தியங்களை குறைத்துக்கொண்டே போவது நன்றாக இருக்கும்.

சுவாரசியமான கதை.

கணேஷ் வசந்த் ஒரு இரண்டு மூன்று ஜெனரேஷன்களுக்கு பசு மரத்தாணி போல மனதில் பதிந்தவர்கள். (சுஜாதா மறைந்துவிட்டதால்இனி அடிக்க ஆளில்லை. இனி பசு, மரம், ஆணி இதையெல்லாம் வைத்து மீண்டும் ஜல்லி அடிக்கலாம்) இவர்கள் எனக்கும் கனவுக் கன்னர்கள்தான் (வசந்தை கன்னர் என்றதற்கு அவர் என் மீது மான நஷ்ட வழக்கு போடமால் இருக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்)

இந்த ப்ளாக்கில் நான் எல்லா பதிக்கப்பட்ட கணேஷ்/வசந்த் கதைகளையும் பற்றி எழுத உத்தேசித்திருக்கிறேன். இன்னும் இதில் முழு மூச்சாக இறங்கவில்லை. அதற்குள் இதை வந்து பார்த்தவர்களுக்கு நன்றி. வேறு யாராவது என்னுடன் இந்த முயற்சியில் சேர விரும்பினால், நல்வரவு!

என்னுடைய கனவுகளில் கணேஷையும் வசனத்தையும் வைத்து நான் கதை எழுதுவதும் ஒன்று. ஷெர்லாக் ஹோம்ஸை வைத்து இப்போதும் கதைகள் எழுதப்படுவதில்லையா? அது போல. சுஜாதா கதை நல்லபடியாக அமைந்தால் ரசித்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

இதை படிக்கும் அதிசயப் பிறவிகள் இரண்டு முறையில் உதவி செய்யலாம். ஒன்று எல்லா கணேஷ்/வசந்த் கதைகளின் லிஸ்டை தொகுக்க உங்களுக்கு நினைவிருக்கும் புத்தகங்களின் பெயரை இந்தப் பதிவுக்கு ஒரு பதிலாக எழுதலாம். எழுதும்போது முடிந்தால் இது எந்த பத்திரிகையில் எப்போது தொடர்கதையாக/குறு நாவலாக/சிறுகதையாக வந்தது, மாத நாவலாக வந்ததா என்பதையும் முடிந்தால் எழுதுங்கள்.

இப்போதைக்கு கதைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இவர்களது வாழ்க்கை வரலாறு ஒரு பக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.